Events
சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகளுக்கான வளவாளர் பயிற்சிப்பட்டறை

சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகளுக்கான வளவாளர் பயிற்சிப்பட்டறை

தேசிய மொழிகள் மற்றும் சமத்துவ மேம்பாட்டு செயற்றிட்டமானது கனேடிய அரசாங்கத்தின் நிதிப்பங்களிப்புடன் , தேசிய மொழி நிதியத்தினால்(NLF) முன்னெடுக்கப்படுகின்றது. இச்செயற்றிட்டம் தனுடைய வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாக சமூகம் மொழி உரிமைகள் குறித்து விழிப்புணர்வைப் பெறுவதோடு, தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி இரண்டாம் மொழியைக் கற்கவும் சமூக நல்லிணக்கத்தை நோக்கி நாட்டை முன்னேற்றுவதுமாகும்.

இச்செயற்றிட்டமானது இரண்டு வருட காலப்பகுதியைக்கொண்டது. அத்தோடு  சமூக மட்ட அமைப்புக்களையும், முன்பள்ளிஆசிரியர்களையும், இளைஞர் யுவதிகளையும் பிரதான மாற்று முகவர்களாக கொண்டு இச்செயற்றிட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயிற்சிப்பட்டறை

நாள் 01

குறித்த வளவாளர் பயிற்சிகளுக்கான முதல் நாள் பயிற்சிகள் வவுனியா தெற்கு பிரதேச செயலக மண்டபத்தில் காலை 10 மணியளவில் ஆரம்பித்தன. குறித்த நிகழ்வானது செயற்றிட்ட இணைப்பாளர் கு.பிரதீப் இன் அறிமுக உரையுடன் ஆரம்பமானது. குறித்த செயற்றிட்டத்தின் பின்னணி, தற்போதைய நிலவரம், கொவிட் சூழல் போன்றவை தொடர்பில் பயிற்சி பெறுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதுடன் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் பயிற்சிகள் எவ்வாறு நடைபெறும், என்பதற்கான விளக்கங்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து வளவாளர் திருமதி. வைஷ்ணவி சண்முகநாதனால் பயிற்சிப்பட்டறை முன்னெடுத்துச் செல்லப்பட்டது.  முதல் நாள் அமர்வில் பின்வரும் விடயங்கள் விரிவாக வளவாளரால் முன் வைக்கப்பட்டது.

 • பயிற்சிப்பட்டறைபற்றிய அறிமுகம்
 • (பயிற்சியின் நோக்கத்தைஅறிதல்,பயிற்சிநெறியின்ஒழுங்கு விதிகள்)
 • மொழி உரிமைகள் –  அறிமுகம்   கலந்துரையாடல்
 • மொழி என்றால் என்ன?    
 • தொடர்பாடல் ஊடகமான மொழி
 • மொழிப்பன்மைத்துவம்
 • மொழியும் சட்டங்களும்

குறித்த விடயங்கள் குழுவேலைகள்  மூலமும், கூட்டு உரையாடல்கள் மூலமும்,  விடய முன் வைப்பு மூலமும் விரிவாக கற்பிக்கப்பட்டதுடன். மொழிகள் சம்பந்தமான உல நிலவரங்கள், சட்டங்கள், வரலாற்றுத்தகவல்கள் என்பவையும் உரையாடப்பட்டது. மேலும் மொழி உரிமைகள் பற்றிய உலக நிலைமைகள் அதனோடு தொடர்புடைய சர்வதேச சட்டங்கள், அவற்றின் பின்னணி நிலவரங்கள் என்பனவும் வளவாளரால் முன் வைக்கப்பட்டன.  பயிற்சியாளர்களாக மாறவுள்ள பயிலுனர்கள் எவ்வாறு இத்தகைய தகவல்களை கிராம மட்டங்களுக்கு விழிப்புணர்வுகளுக்காக கொண்டு செல்வது, என்பதனை முன்வைத்து வளவாளரினால் ஆரம்ப கட்ட பயிற்சி நுட்பங்களும் வழங்கப்பட்டது. அத்துடன் குறித்த விடயப்பரப்புகளுக்கான தகவல் ஆவணங்களும், குறிப்புக்களும் பயிற்சி பெறுனர்களுக்கு வழங்கப்பட்டது.

நாள் 02

இரண்டாம் நாள் பயிற்சியானது காலை 10 மணியளவில் பிரதேச செயலாளர் திரு. குமார அவர்களின் வருகையுடன் ஆரம்பானது. குறித்த இரண்டாம் நாள் பயிற்சியினைத் தொடக்கிவைக்கும் முகமாக மொழி உரிமைகள் பற்றிய செயற்றிட்டமானது இலங்கைச்சூழலைப் பொறுத்த வரையில் மிகவும் அவசியாமான ஒன்றாக இருப்பதுடன் சமூகங்களுக்கு இடையில் நிலவக்கூடிய முரண்பாடுகளைத் தீர்பதற்கான உதவுகளை இச்செயற்றிடம் செய்யும் என்பதனைத் தான் நம்புவதாகத் தெரிவித்தார். வவுனியா பிரதேசமானது மூவின மக்கள்களும் வாழக்கூடிய ஒரு பிரதேசமாக இருக்கின்றது. எனவே  மொழிகளை அறிந்துகொள்ளுதல் , மொழி உரிமைகளை அறிந்துகொள்ளுதல் என்பது நம்முடைய நாட்டின் நல்லிணக்கத்திற்கும் ஒற்றுமைக்கும் முக்கியமானது என்று தெரிவித்ததுடன். தொடர்ச்சியாக இச்செயற்றிட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. சுந்தரம் டிவகலாலா அவர்களுக்கும் நிறுவனத்திற்கும் தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும் கோவிட் தொற்றுக்காலத்தில் நாம் இத்தகைய கூட்டங்களைக் கூடும் போது சுகாதார நடைமுறைகளை சரியாகக் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார். அவருடைய வாழ்த்துரையைத் தொடர்ந்து பயிற்சிப்பட்டறையின்  இரண்டாம் நாள் பயிற்சிகள் ஆரம்பமாயின. ஏற்கனவே திட்டவரைபில் உள்ளபடி இரண்டாம் நாளில் பின்வரும் விடயங்கள்  வழங்கப்பட்டன.

 • மொழி உரிமைகள் என்றால் என்ன? 
 • மொழி உரிமை பற்றிய வளவாளரின் முன் மொழிவுகள்  
 • மொழி உரிமையும் அரசியல் சட்டங்களும்
 • மொழி உரிமை பற்றிய உலகளாவிய பிரச்சினைகள்
 • மொழி உரிமை பற்றிய தேசி பிரச்சினைகளும் வரலாறும் 
 • மொழி உரிமையின் சட்டவாக்கம், அரசியலமைப்பு  
 • மொழி உரிமை பற்றிய தேசிய பிரச்சினைகளைப் பட்டியலிடல்.
 • அரச கரும மொழிகள் 

குறித்த பயிற்சியின் போது நாட்டில் ஏற்படக்கூடிய மொழி உரிமைகள் தொடர்பான உரிமைமீறல்கள் வன்முறைகள் பற்றி விளக்கப்பட்டதுடன். சட்டங்கள் பற்றியும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் பற்றியும் கலந்துரையாடல்கள், முன்வைப்புக்கள், நாடகம் போன்றன மூலம் வளவாளரும் பயனாளர்களும் இணைந்து பயிற்சிகளைப் பெற்றனர். சிங்கள தமிழ் மொழிகளுக்கு இடையிலான சிக்கல்கள், மொழி உரிமைகள் மீறப்படக்கூடிய சந்தர்ப்பங்களை உதாரணங்களாக உருவாக்கி இவ்வகை ஆற்றுகைகள் மூலம் மொழி உரிமைகள் பற்றிய விபரணைகள் வழங்கப்பட்டன.

நாள் 03

மொழி உரிமைகள் தொடர்பான வளவாளர் பயிற்சிகளுக்கான மூன்றாம் நாள் பயிற்சிப்பட்டறையானது காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.  திட்டமிட்ட படி பயிற்சிபெறுனர்களுக்கான மொழி உரிமைகள் தொடர்பான பின்வரும் விடயங்களில் பயிற்சிகளும், விரிவான முன்வைப்பு முறைகளும் வழங்கப்பட்டன. 

 • கல்வி கற்கும் மொழி
 • நிருவாக மொழி ·
 • (பகிரங்க நிறுவனங்களினால் பொதுப்பதிவேடுகளை பேணுதல் மற்றும் அலுவல்கள் யாவும் கொண்டு நடத்தப்படுதல்)
 • (இருமொழி பிரதேச செயலகங்கள் , கடிதப்பரிமாற்றம் செய்தல் மற்றும் ஆவணப்பிரதி பொழிப்பு அல்லது மொழிபெயர்ப்பு ஆகியவற்றை பெற்றுக்கொள்ளுதல் )
 • மாகாணசபைகளின் செய்தித் தொடர்பு செயற்பாடுகள் , ஆட்சேர்ப்பு பரீட்சைக்கான மொழி
 • நீதிமன்ற மொழி       (செயற்பாடுடனானவிளக்கம் முன்வைப்பு)
 • இலங்கையில் அரசகரும மொழி அமுலாக்கலின் தேவை  அரசகரும மொழி கொள்கையினை நடைமுறைப்படுத்துவதற்காக தாபிக்கப்பட்ட நிறுவனங்கள்

(தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு · அரசகரும மொழிகள் திணைக்களம் ,அரசகரும மொழிகள் ஆணைக்குழு )

இவற்றோடு மொழி உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் மக்களுக்கு வழங்க கூடிய ஆலோசனைகளையும். எவ்வாறு மொழி உரிமைகள் மீறப்படும்போது அதற்கு எதிரான விழிப்புணர்வையும், முறையிடுதலையும் செய்வதற்கான அறிதலைக் கிராம மட்ட அமைப்புக்களிடம் கொண்டு சேர்ப்பது அதன் மூலம் அவ் அறிதலை கிராம மக்களுக்கு வழங்குவது என்பதான விடயங்கள் தொடர்பில் விவாத முறையான முன்வைப்புக்களை  பயிற்சி பெறுனர்களுக்கு இடையில் வளவாளர் நடாத்தியிருந்தார். அத்துடன் தாங்கள் விவாதித்த விடயங்களை ஆவணப்படுத்தவும் உதவியிருந்தார்.

நாள் 04

பயிற்சிப்பட்டறையின்  இறுதி நாளில் திட்டமிட்டபடி பால்நிலை சமத்துவம் பற்றிய விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக இச்செயற்றிட்டத்திற்கு நிதி உதவி வழங்கக்கூடிய கனேடிய அரசாங்கமானது பால் நிலை சமத்துவத்தை தம்முடைய கொள்கைகளில் ஒன்றாக தங்களுடைய செயற்றிட்டங்களில் இணைத்துள்ளமையும், அதனுடைய சமகாலத்தேவையின் பின்னணியும் செயற்றிட்ட இணைப்பாளரினால் பயிற்சி பெறுனர்களுக்கு விளக்கப்பட்டது. அதன் பின்னர் வளவாளரினால் பால் நிலை சமத்துவம் தொடர்பான பின்னணிகளும் பிரச்சினைகளும் அதன் சட்ட, சமூக நடைமுறைகளும் விரிவாக விளக்கப்பட்டன.  குறிப்பாக பின்வரும் கருப்பொருட்கள் கலந்துரையாடப்பட்டன

 • பால் என்றால் என்ன?
 • பால் நிலைத்தெரிவு என்றால் என்ன?
 • பாலும் பாலியல் தெரிவுகளும்
 • ஆணாதிக்கம் என்றால் என்ன
 • பெண் உரிமைகள் என்றால் என்ன அவற்றின் பிரச்சினைகள்
 • பால்நிலைச்சமத்துவம் என்றால் என்ன?
 • பால்நிலை சமத்துவத்தின் வரலாறும் இலங்கைச் சூழலும்
 • பால்நிலை சமத்துவத்தை அமுல் படுத்துவதில் சட்டத்தின் பங்களிப்பு
 • பால்நிலைச்சமத்துவமும் சமூக, பண்பாட்டு பின்னணிகளும் பிரச்சினைகளும்
 • பால்நிலை சமத்துவத்தை சமூகத்திற்கு எவ்வாறு கற்பிப்பது

முதலான விடயங்களில் விரிவான  கலந்துரையாடல், குழுச்செயற்பாடு போன்ற நுட்பங்களின் ஊடான வளவாளர் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

குறித்த பட்டறையின் முடிவில் செயற்றிட்ட இணைப்பாளரினால்  இப்பயிற்சிகளின் பின்னர் இச்செயற்றிட்டம் எத்தகைய பாதையில் செல்லவுள்ளது. பயிற்சி பெற்ற வளவாளர் பயிலுனர்கள் எவ்வாறு இச்செயற்றிட்டத்தின் பங்காளர்களாகச் செயற்படப்போகின்றார்கள். இச்செயற்றிட்டமானது கிராம மட்டங்களில் எத்தகைய மொழி உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவம் பற்றிய செயற்பாடுகளை, விழிப்புணர்வுகளை முன்னெடுக்கவுள்ளது என்பது பற்றி விரிவான முன்வைப்பு ஒன்றும் வழங்கப்பட்டது.

பயிற்சிநாளின் முடிவில் பயிற்சிப்பட்டறை பற்றிய பயிலுனர்களின் கருத்துக்களும் அபிப்பிராயங்களும் கேட்கப்பட்டது. அவர்கள் தங்களுடைய பரிந்துரைகளையும் நன்றியையும் தெரிவித்தனர்.