வீட்டுத் தோட்டம் அமைக்க முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ‘ஆறுதல்’ நிறுவனம் அழைப்பு!

முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் வீட்டுத் தோட்டங்களை அமைக்கும் பணியை மேற்கொள்ளுமாறு ‘ஆறுதல்’ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரும் வட மாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் போசகருமான சுந்தரம் டிவகலாலா கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண கூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த செயற்பாட்டை மேற்கொள்ள முன்வருமாறும், அதற்கான வழிகாட்டலை ‘ஆறுதல்’ நிறுவனம் வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘ஆறுதல்’ நிறுவனம் வடக்கு கிழக்கில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ‘டிப்ளோமா’ பயிற்சி நெறியை வழங்கி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

‘ஆறுதல்’ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் சுதந்தரம் டிவகலாலா இவ்விடயம் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு-

“வீட்டுத்தோட்டம் அமைப்போம்
விருந்தளித்து மகிழ்வோம்”

உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் 2020ம் ஆண்டை பெரு மகிழ்ச்சியோடு வரவேற்றனர். சிறிது காலத்தில் இந்த மகிழ்ச்சி குறையத் தொடங்கியது. யாருமே எதிர்பாராத, எங்கள் சந்ததியே அறிந்திராத “Corona Virus” சீனாவில் ஆரம்பித்தது, படிப்படியாக பல நாடுகளுக்கும் பரவி பெரும் உயிர்ச் சேதத்தினை ஏற்படுத்தி அச்சுறுத்தலாக உள்ளது. அது தொடர்ந்து கொண்டும் இருப்பதை நாம் அறிவோம்.

இதனால் உலகப் பொருளாதாரம் பெருமளவு வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளதோடு சுகாதாரத் துறையும் பெரும் சவாலை எதிர்நோக்கி உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு, சில கிராமங்கள் முடக்கம், தனிமைப்படுத்தல், சமூக இடைவெளி பேணல் என “Corona Virus” பரவலுக்கு எதிராக பல வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந் நிலையில், தொடர்ந்தும் உலகப் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட ஏனைய துறைகள் பாதிப்படையும் நிலையில் பல நாடுகள் செய்வதறியாது திணறி வருகின்றன. இவை எமது நாட்டுக்கும் பொருந்தும்.

இதனை கவனத்தில் எடுத்து இதிலிருந்து எம்மை பாதுகாக்க என்ன செய்யலாம்? பொருளாதாரம், கல்வி முதலானவற்றை பாதுகாக்க எம்மாலான முயற்சி எடுப்பது அவசியமாகும். பல்வேறு துறைகளிலும் அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வருகின்றது. எனவே, முன்பள்ளி ஆசிரியர்கள் என்ற வகையில் நீங்களும் உங்களிடம் கல்வி கற்க வரும் பிள்ளைகளின் பெற்றோரும் இதில் பங்களிப்பு செய்ய முடியும்.

முன்பள்ளி ஆசிரியர்கள் மார்ச் 13ம் திகதி முன்பள்ளி மூடிய நிலையில் இருந்து வீடுகளில் முடங்கி இருக்கிறீர்கள். எனவே இந்தக் காலத்தை தாங்களும் தங்கள் முன்பள்ளி சிறார்களும் பயன் பெறும் வகையில் சில முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீங்கள் பாதுகாப்பாக வீட்டில் இருப்பதோடு வீட்டுத் தோட்டம் ஒன்றை அமைத்தல் அவசியம் ஆகும். இத்தோட்டத்தில் காய்கறிகள், கீரை வகைகள், கிழங்கு வகைகள், தானியங்கள் என்பவற்றை பயிரிட்டு தங்களுடைய அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்துவதோடு மேலதிகமாக உள்ளவற்றை விற்பனை செய்து சிறு வருமானத்தினையும் பெற்றுக்கொள்ளலாம்.

30 வருடகால யுத்தத்தில் இவ்வாறான சவால்களை எமது சமூகம் எதிர்கொண்டுள்ளது. யுத்த காலத்திலேயே விவசாயம், மீன்பிடி, சிறு கைத்தொழில் முயற்சிகள், கல்வி நடவடிக்கைகள், சுகாதாரம் போன்ற துறைகள் எந்த இடைவெளியும் இல்லாமல் நடைபெற்றன. என்ன துன்பம் வந்தாலும் அதனை சவாலாக ஏற்று நாமும் எமது எதிர்கால சந்ததியினரும் வாழ்வதற்கு வழி சமைக்க வேண்டும்.

வீட்டுத் தோட்டங்களை தாங்கள் அமைப்பதோடு தங்களோடு தொடர்பிலுள்ள முன்பள்ளி சிறார்களின் பெற்றோர்களையும் இந்த முயற்சியில் ஈடுபடுத்துவதற்கு தாங்கள் வழிப்படுத்தலாம். இதனால் பெற்றோர்களும் பயன்பெற முடியும். போசாக்கான, இரசாயன  மருந்துகள் அற்ற காய்கறிகளை பெற்றுக்கொள்ள முடிவதோடு எதிர்வரும் காலங்களில் முன்பள்ளிகள் ஆரம்பிக்கும் போது எமது குழந்தைகளுக்கு போசாக்கான உணவினை வழங்குவதற்கும் இவ் வீட்டுத் தோட்டம் பெரிதும் பயனுடையதாக அமையும்.

இவ்வாறான முயற்சியில் ‘ஆறுதல்’ நிறுவன பணிப்பாளர் அவர்களின் வழிகாட்டலில் வடமாகாண முன்பள்ளி ஆசிரியர் தொழிற்சங்கம் ஈடுபடவுள்ளது. எனவே, இம் முயற்சிக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.