பரீட்சைப் பெறுபேறு வெளியாகும் காலத்தில் சிறுவர்களின் உளநலம்

  • ந.றஞ்சுதமலர் – உளவளத்துணையாளர்


ஒவ்வொரு பொதுப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்தும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை வாழ்த்துவதும், பாராட்டு வெளியீடுகளையும் அனைத்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் குறிப்பிட்ட காலம் வரை காணலாம். அதே வேளையில் பல மாணவர்களின் விபரீத முடிவுகளையும் குறிப்பாக தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள் போன்ற செய்திகளையும் அறியக்கூடியதாக இருக்கின்றது.

எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்கப்பெறாமையினால்தான் குறிப்பிட்ட மாணவன் அல்லது மாணவி இவ்வாறான செயல்களைச் செய்தார்கள் எனப் பொதுவாகக் காரணம் சொல்லப்படுகிறது. இந்நிலையானது அவர்களையும் அவர்களின் குடும்பத்தையும் அவர் சார்ந்தோரையும் ஏனைய சிறுவர்களையும் பாதிப்பதாக அமைகின்றது.

ஏன் சிறுவர்கள் இவ்வாறான விபரீத முடிவுகளை எடுத்துக் கொள்கிறார்கள்? இதனோடு தொடர்புடைய முக்கியமான காரணிகள் எவை? சிறுவர்களை இவ்வாறான நிலைமைக்கு இட்டுச் செல்லாதிருக்க அவர்களை எவ்வாறு நன்னிலைப்படுத்துவது? மற்றும் இவ்வாறான மனநிலையிலுள்ள சிறுவர்களை எவ்வாறு கையாளுவது? போன்ற விடயங்களை இக்கட்டுரை சுருக்கமாக ஆராய்கின்றது.

பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவரப் போகின்றது என்ற செய்தியே பொதுவாக சிறுவர்களுக்கும் பெற்றோருக்கும் ஒரு பதட்டமான மனநிலையை உருவாக்கி இருக்கும். ஆனாலும் தொடர்ச்சியாக இப் பதட்ட நிலை, பெறுபேறுகள் வெளியான பின்னரும் தொடருமாயின் அது ஆரோக்கியமாகக் கொள்ள முடியாது. சில சிறுவர்கள் இக்காலங்களில் விபரீதமான தற்கொலை போன்ற விடயங்களில் ஈடுபடுவதற்கு இப் பதட்ட நிலையும் செல்வாக்குச் செலுத்தும். குறிப்பாக கட்டிளமைப்பருவத்தினர் பதட்டமான நிலையில் என்ன செய்வது என்று தெரியாமலேயே விபரீதமான முடிவுகளை திடீரென்று எடுத்துவிடுகிறார்கள். அவ்வாறான முடிவு பிழையென்பதை சிந்திப்பதற்கு அல்லது ஆராய்வதற்கு அவர்களுக்கு கால அவகாசம் கிடைப்பதில்லை. அவர்கள் யாருடனும் இது தொடர்பாக எவ்வித பகிர்தல்களையும் செய்து கொள்ள மாட்டார்கள்.

பொதுவாக தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சிறுவர்களுக்கு உளம்சார் பிரச்சினைகள் காணப்படலாம். ஒரு சிலருக்கு மன அழுத்தம் பிரச்சினையாக இருக்கிறது. அவர்களின் கசப்பான அனுபவங்களின் பின்னணிகளும் அவர்களின் வாழ்வியல் சூழலும் மன அழுத்தத்திற்குக் காரணங்களாக அமையும்.

சிறுவர்களின் தாங்குதிறன் அதாவது பிரச்சனைகளிலிருந்து மீளெழும் சக்தி தொடர்பான நிலையையும் குறிப்பிடலாம். தாங்குதிறன் என்பது சிறுவர்களின் ஆளுமையுடன் தொடர்புள்ள விடயமாக உள்ளது. தோல்விகள் மற்றும் வேண்டப்படாத நிலைமைகளுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பில் முறையான வழிமுறைகளைக் கையாள முடியாத நிலையையும் குறிப்பிடலாம்.

குடும்பத்தில் வேறு யாராவது தற்கொலை முயற்சியோ அல்லது தற்கொலையோ செய்திருந்தாலும் சிறுவர்கள் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.

சிறுவர்களின் உள ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது அவர்களின் குடும்ப வளங்களே ஆகும். நமது சூழலில் பல்வேறுவிதமான குடும்பங்கள் உள்ளன. குடும்பங்களில் காணப்படும் வறுமை, குடும்ப ஒற்றுமையின்மை, பெற்றோர் பிரிந்து வாழுதல், குடும்ப வன்முறை, குடும்பத்தில் மதுப் பாவனை போன்ற பல்வேறு நிலைமைகள் சிறுவர்களின் உள ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன. சிறுவர்களுக்கு சரியான அன்பும் கவனிப்பும் இல்லாத நிலையில் தவறான உறவுகளை அமைத்துக் கொள்வதும் தவறான முடிவுகளையும் எடுத்துக்கொள்கிறார்கள்.

குடும்ப உறவுகள் நம்பிக்கை தருவனவாகவும் மனக்கிளர்ச்சிகளையும் குழப்பங்களையும் விளங்கிப் புரிந்து கொண்டு ஆதரவு கொடுப்பவையாகவும் அமையும் இடத்து சிறுவர்கள் நம்பிக்கையூட்டப்படுகிறார்கள்.
சிறுவர்கள் தங்களுடைய இலக்குகளை அமைத்துக் கொள்வதற்கு குடும்பங்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். சிறுவர்கள் தங்களை சரியாக அடையாளம் காணவும் அவர்களின் கனவுகளையும் இலட்சியங்களையும் வெளிப்படுத்துவதற்கும் இடமளித்தல் வேண்டும். பெற்றோர் தாம் இழந்தவைகளைப் பிள்ளைகள் மூலம் அடைந்து கொள்ள முயற்சிப்பது பிள்ளைகளின் மன ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கின்றது.

சிறுவர் நேய கற்றலை பாடசாலைகள் மேற்கொள்ளல் வேண்டும். ஆசிரியர்கள் பிள்ளைகளுடன் தெளிவான தொடர்பாடலையும் நம்பிக்கையான உறவுமுறையினையும் வளர்த்தல் வேண்டும். பிரச்சனையான அல்லது குழப்பமான மனநிலையிலுள்ள சிறுவர்களை இனம் காணும் ஆற்றலும் அவ்வாறான மனநிலையிலுள்ள பிள்ளைகளுக்கு உதவும் ஆற்றலும் ஆசிரியர்களுக்கு அவசியமாகும். ஆசிரியர்களால் முடியாத பட்சத்தில் உரியவர்களிடம் உதவியைப் பெற்றுக் கொள்ளலாம். பரீட்சைக்கு தயார்படுத்தல் என்பதும் முக்கியமான விடயமாகும். இங்கு பரீட்சை பதட்டத்தைக் கையாளுதல் தொடர்பாகவும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

சிறுவர்களின் சிந்தனைப் பரப்பை பரந்துபட்டதாக அமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானதாகும். அவர்களின் ஆற்றல், திறமைக்கு ஏற்ற வகையில் அவை நிர்ணயம் செய்யப்பட்டதா என்பதையும் நோக்குதல் வேண்டும். அத்துடன் பிள்ளைகளுக்கு பொறுப்புக்களை கொடுத்தல் அவர்களையும் தீர்மானம் எடுப்பதில் பங்குபற்றச்செய்தல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்துவது சிறுவர்களின் ஆளுமையை விருத்தியடையச் செய்யும்.

பாடசாலைக் கல்வி மற்றும் பெறுபேறுகள் தொடர்பிலும் மாற்று வழிகள் தொடர்பிலும் மாணவர்கள் ஆசிரியர்களாலும் கல்விச்சமூகத்தாலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளார்களா? கற்றல்கள் நிகழ்ந்தாலும் மாணவர்களால் அவை சரியான முறையில் உள்வாங்கப்பட்டுள்ளதா? என்பதையும் நோக்குதல் வேண்டும். பிரச்சனைகள் தீர்வற்றவை அல்ல, ஒவ்வொன்றுக்கும் பல தீர்வுகளும் மாற்றுவழிகளும் இருக்கின்றன. குறிப்பிட்ட பரீட்சைப் பெறுபேறு மட்டுமே தீர்வாக அமைவதில்லை.

பரீட்சைப் பெறுபேறுகள் மட்டுமே சிறுவர்களை இவ்வாறான முடிவுகள் எடுப்பதற்கு முக்கிய காரணங்கள் அல்ல. சிறுவர்களின் ஏனைய தாக்கங்கள்தான் முக்கியமாக அவர்களின் எதிர்வயமான மனநிலையே காரணமாக அமையும்.

பாடசாலைகளில் சிறுவர்களின் உளநலம் தொடர்பாக கையாளுவதற்கு பொருத்தமான உளவள ஆலோசக ஆசிரியர்கள் நியமிக்கப்படல் வேண்டும். அதுமட்டுமல்லாமல் அனைத்து ஆசிரியர்களும் பிள்ளைகளின் உளநலக் கவனிப்பு தொடர்பில் முழுமையான பயிற்சி பெற்றவர்களாகவும் அக்கறையுடன் செயற்படுபவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

சிறுவர்களைச் சுற்றியுள்ளவர்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளபோது அவர்கள் தங்கள் நிலையில் நின்று சிந்திக்காமல் மற்றவர்களுக்காகவே சிந்திக்கிறார்கள். வளர்ந்தவர்களும் சிறுவர்களின் நிலையில் இருந்து அவர்களை நோக்காது தங்களின் நிலையிலும் தங்களின் கடந்த கால அனுபவத்திலும் சிறுவர்களை அணுகுகிறார்கள்.

சாதாரணமாக சிறுவர்களின் கல்விப்பெறுபேறுகளில் மிகுந்த அக்கறைப்பட்டுக்கொள்ளும் சமூகம் இவ்வாறான விடயங்களைக் கவனத்தில் கொள்ளுவதில் பின்னடைவுகள் காணப்படுகின்ற நிலைமையை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

ஆரோக்கியம் தனித்து மனிதனின் உடல், உளம் சார்ந்து மட்டுமல்லாமல் சமூகம் மற்றும் ஆன்மீகத்துடன் நெருங்கிய தொடர்புள்ள விடயமாக அமைகிறது. சமூக உறவுகள் பலமாக உள்ளபோது சிறுவர்கள் சமூகத்தில் அக்கறையும் நல்ல நட்பு வட்டங்களையும் அமைத்துக்கொள்ளுவார்கள்.

சிறுவர்களின் ஆளுமையை மேம்படுத்தும் விடயங்களில் சீரான பொழுதுபோக்கு அவசியம். பொதுவாக தொலைக்காட்சி பார்ப்பதையே அநேகமான சிறுவர்கள் தங்களுடைய பொழுது போக்கு விடயமாகக் குறிப்பிடுகின்றனர். தனித்து தொலைக்காட்சி பார்த்தல் என்பது அவர்களின் சமூக ரீதியான ஆன்மீக ரீதியான செயற்பாடுகளுக்கு தடையாக அமைகின்றது. ஆன்மீகச் செயற்பாடுகள் தத்தளிக்கும் எண்ண ஓட்டங்களைச் சீர் செய்யவும் நேர்வய எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவும் துணைபுரிகின்றன.

சிறுவர்களுக்கு சாந்த வழிமுறைகள், தியானம், சுவாசப்பயிற்சி போன்ற விடயங்களை பாடசாலைகளிலோ அல்லது குடும்ப மட்டத்திலோ நடைமுறைப்படுத்தல் வேண்டும். நேர்வய சிந்தனைகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை (இணைப் பாடவிதான செயற்பாடுகள்) அவர்களின் திறன், விருப்பங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளல் வேண்டும்.

மதுப் பாவனையின் விளைவுகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்பில் குடும்பங்களுக்கு வழிகாட்டல் ஆலோசனைகளும் சமூக விழிப்புணர்வும் செய்தல் வேண்டும்.
சிறுவர்களுக்கு ஏற்படுகின்ற முதலாவது பிரச்சினையை முழுமையாகத் தீர்த்துவைக்காவிடில் தொடர்ந்து மேலும் பாதிக்கப்படுகின்ற நிலைமை காணப்படுகின்றது.

மற்றைய பிரச்சினைகள் பலமடங்காகி அவர்களை மிக மோசமான நிலைமைக்கு இட்டுச் செல்கின்றது. இவர்களுக்கான பிரச்சினைகளை இனம் காணும் பட்சத்தில் முழுமையாக அவற்றுக்கான பரிகாரங்களை இயன்றவரை செய்வதே சிறுவர்களுக்கு அவர்களின் நலனின் பொருட்டு செய்யும் சேவையாக இருக்கும்.

சிறுவர் இல்லங்களிலும் உறவினர்களுடனும் வாழும் பிள்ளைகள் தொடர்பில் விசேட கவனமும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்தல் வேண்டும்.
பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும் காலங்களில் குடும்ப அங்கத்தவர்கள் பதட்டமடையாமல் சிறுவர்களுக்கு ஆதரவாக இருத்தல் அவசியம்.

சிறுவர்கள் வழமைக்கு மாறாக செயற்படின் கட்டாயமாக அவர்களுடன் மனம் திறந்து கதைப்பதோடு உரிய உதவிகளை பெற்றுக்கொடுத்தல் அவசியம். பெற்றோரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத பட்சத்தில் அவர்களின் ஏமாற்ற உணர்வுகளைச் சிறுவர்கள் இலகுவில் புரிந்து கொள்வதால் மேலும் பதட்டமடையும் வாய்ப்புக்கள் இருக்கின்றன.

இந்நிலைமைகளில் சிறுவர்களுக்கு நெருக்கமான ஆசிரியர்கள், உளவளத்துணையாளர்கள் போன்றவர்களின் உதவிகளைப் பெற்றுக்கொடுத்தல் வேண்டும். சிறுவர்கள் இவ்வாறான சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் நல்லதோர் மன நிலையில் வாழ்வின் இருத்தலையும் அதன் நோக்கையும் விளங்கிக் கொள்ள குடும்பம், பாடசாலை மற்றும் சமூகம் அவர்களுக்கு உதவுதல் அவசியம்.

பெற்றோரினதும் ஆசிரியர்களினதும் கனவுகளை மட்டும் சுமக்காமல் சிறுவர்கள் தங்களின் கனவுகளையும் இலட்சியங்களையும் சுமப்பார்களாக இருந்தால் அவர்களின் முயற்சிகளில் வெற்றியீட்டுபவர்களாகவும் பொறுப்பெடுப்பவர்களாகவும் சாதனையாளர்களாகவும் உருவாகுவார்கள்.

( 31.5.2020 அன்று வீரகேசரியில் வெளியான கட்டுரை)