கொரோனா தனிமைப்படுத்தல் காலத்தில் சிறுவர்களின் உளநிலையைக் கையாளுதல்


கொரோனாவின் தாக்கத்தினால் சிறுவர்களும் வீடுகளுக்குள் முடக்கப்பட்டிருகிறார்கள். இந்நிலைமையானது சிறுவர்களுக்கும் பல உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தலாம். முக்கியமாக அவர்கள் எவ்வாறான குடும்பச் சூழ்நிலையிலும் எவ்வாறான ஆளுமைப் பண்புகளை உடையவர்கள் என்பதனாலும் அவர்களின் வயது, பால் போன்றவற்றினாலும் உளத் தாக்கங்கள் வேறுபடலாம்.

தற்போது பொதுவாகச் சிறுவர்களைப் பொறுத்தவரையில் அவர்களின் தொடர்பாடல்களும் உறவு நிலைமைகளும் குடும்ப மட்டத்திலும் இணையவழித் தொடர்பாடல்களிலும் தங்கியிருக்கின்றது. சிறுவர்களின் பௌதீக ரீதியான அசைவு வீட்டுக்குள் மட்டுமே காணப்படுகின்றது. இந்த நிலைமையை சிறுவர்கள் தங்களுக்கு எவ்வாறு பழக்கப்படுத்திக் கொண்டுள்ளார்கள், இந்த நிலைமை அவர்களுக்கு சௌகரியமாக உள்ளதா என்பதில் வளர்ந்தோர் கவனம் செலுத்த வேண்டும்.

பாடசாலைகள், மற்றும் கல்விக்கூடங்கள் தனியே சிறுவர்களுக்கு கல்வியை மட்டும் போதிக்கும் இடங்கள் அல்ல. குறிப்பாக அவர்களின் ஆளுமை விருத்திக்கு பல்வேறு வழிகளில் உதவுவதுடன் பல சிறுவர்களுக்கு பாதுகாப்பிற்குரிய இடங்களாகவும் அமைகின்றன.

இது மட்டுமல்லாமல் சிறுவர்களுக்கான வெளித்தொடர்புகள் முக்கியமாக நண்பர்கள், உறவினர்கள் போன்றவர்களுடனான தொடர்புகள் தற்போதைய நிலையில் முன்பிருந்ததைப்போல காணப்படவில்லை. பெரும்பாலான சிறுவர்களுக்கு நம்பத்தகுந்த நபர்களாக நண்பர்கள் இருப்பார்கள். அவர்களின் மன எழுச்சிகளை, பகிர்தல்களை தமது நண்பர்களுடனேயே குறிப்பாக கட்டியமைப் பருவத்தினர் வைத்திருப்பார்கள்.

தற்போது கொரோனாவின் தாக்கத்தினால் பெற்றோர் மற்றும் குடும்ப அங்கத்தவர்களும் பல்வேறு தாக்கங்களுக்கு உட்பட்டிருக்கலாம். முக்கியமாக தொழில் இழப்பு, பொருளாதார பிரச்சனைகள், வீட்டு வன்முறை போன்ற பிரச்சனைகளும் சிறுவர்களைப் பாதிக்கின்ற விடயங்களாக இருக்கின்றன.
அவசரமான உலகில் நேரம் கிடைக்காமல் பெற்றோர்களும் பிள்ளைகளும் வாழ்ந்திருப்பார்கள். அவ்வாறான சூழ்நிலையில் ஒரு நபரைச் சுற்றி எவ்வாறான தொடர்புநிலைகள், உறவு நிலைகள் மற்றும் மனஎழுச்சி நிலைகள் உள்ளன என்பதை மற்றவர்கள் தெளிவாகவும் சரியான புரிதலும் இல்லாத நிலைமையும் இருந்திருக்கலாம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இவ்வாறான விடயங்களின் வெளிப்படுத்தல்களும் மற்றவர்களில் தாக்கங்களை உண்டாக்கலாம். சிறுவர்களின் நடவடிக்கைகள் பெற்றோருக்கு அதிருப்தி தருவதாகவும் இல்லையேல் பெற்றோருக்கு அல்லது வளர்ந்தவர்களுக்கு தமது நடவடிக்கைகள் தெரியும் நிலையை சிறுவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கலாம்.

சிறுவர்களைப் பொறுத்தவரையில் தற்போது தொடர்புகள் வீட்டுச் சூழ்நிலையில் பெற்றோர், குடும்ப அங்கத்தவர்களுடன் வரையறுக்கப்பட்டிருக்கும். வீட்டில் ஒவ்வொரு நபரும் ஒருவரில் ஒருவர் தங்கி வாழுகின்ற நிலை உருவாகியிருக்கிறது. பொதுவாக வீட்டில் ஒரு நபர் பாதிக்கப்பட்டிருப்பின் மற்றைய அனைவரையும் அது எளிதாக ஆக்கிரமிக்கும்.

இவ்வாறான சூழ்நிலையில் சிறுவர்களின் உளநிலையைக் கையாளும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள்:

• கொரோனா தொடர்பான பீதியான மனநிலைகளை சிறுவர்களுக்கு ஏற்படுத்தாதிருத்தல் வேண்டும். கொரோனா பாதுகாப்புத் தொடர்பான தெளிவான அறிவுறுத்தல்களை அவர்கள் பின்பற்றுதல் வேண்டுமே தவிர, அவை அவர்களின் உளச்சமநிலையில் தாக்கத்தை உண்டு பண்ணாதிருத்தல் அவசியம். முக்கியமாக பெற்றோரின் அல்லது வளர்ந்தவர்களின் பீதியான அல்லது பயம் கலந்த உணர்வுகள் சிறுவர்களைப் பாதிக்காதிருத்தல் வேண்டும். ஆகவே சிறுவர்களுக்கு முன்பாக அவ்வாறான நிலைகளை வெளிப்படுத்தாதிருத்தல் நன்று. அத்துடன் வளர்ந்தவர்களும் அவ்வாறான குழப்ப நிலைகளில் இருந்தால் விடுபடுவதற்கான வழிவகைகளைச் செய்தல் வேண்டும்.

• சிறுவர்களுடன் ஆரோக்கியமான, இதயபூர்வமான தொடர்பாடலை செய்தல் வேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் நிலையில் நின்று விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். குறிப்பாக சிறுவர்களின் மனவெழுச்சிகளை ( emotions ) புரிந்து கொள்ளுதல் வேண்டும். சிறுவர்களின் கோபம், ஆக்கிரோஷம், வெறுப்புணர்வு, நம்பிக்கையின்மை, எளிதாக மாற்றங்களுக்கு உள்ளாகுதல் மற்றும் உடலியல் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாமை போன்ற மன எழுச்சி நிலைமைகளைப் புரிந்து கையாளுதல் வேண்டும். இவ்வாறான நிலைகளைக் கையாள இயலாத பட்சத்தில் வளர்ந்தவர்கள் கோபமடையும் நிலைதான் அநேகமாகக் காணப்படுகின்றது. ஆகவே இச்சந்தர்ப்பத்தில் உரியவர்களின் உதவியை (உளவளத்துணையாளர், சிறுவர் நல உத்தியோகத்தர்கள் மற்றும் உளமருத்துவர்) நாடவேண்டும்.

• சிறுவர்களின் இலக்கை நோக்கி அவர்களை வழிப்படுத்துவது பெற்றோரின் கைகளிலேயே உள்ளது. நாளாந்த செயற்பாடுகள் தொடர்பில் சரியான திட்டமிடுதல்களை சிறுவர்களோடு சேர்ந்து மேற்கொள்ளல் வேண்டும். கல்விக்கான நேரம், தொலைக்காட்சி பார்த்தல், விளையாடுதல் மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கான நேரத்தை சிறுவர்களுக்கு சலிப்பு ஏற்படாத வகையில் திட்டமிடுதல் வேண்டும். அத்துடன் சிறுவர்களுக்கான உணவு பழக்கத்தை ஆரோக்கியமான எளிய முறையில் வடிவமைக்கலாம்.

• சிறுவர்களின் கல்வியை மையப்படுத்தி மட்டும் நோக்காமல் அவர்களின் தொடர்பாடல், நட்பு வட்டங்கள், ஆளுமை விருத்திக்குத் தேவையான ஏனைய செயற்பாடுகள் தொடர்பாக முடிந்த அளவில் வீட்டிலேயே கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தி அவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்தல் அல்லது அதற்கான அங்கீகாரத்தைக் கொடுத்தல் வேண்டும். சிறுவர்கள் தங்களின் ஆக்கத்திறன்களை வெளிப்படுத்தும்போதும், புதிய படைப்புக்களை உருவாக்கும்போதும் அவற்றை அங்கீகரித்து புதிய திறன்களை அடையாளப்படுத்துவதுடன் அவற்றைத் தட்டிக்கொடுத்தலும் வேண்டும். அதிகாரம் செலுத்தும் அல்லது முற்றிலும் தளர்வு நிலைப் பெற்றோராக இருக்காமல் இயன்றளவு ஒரு ஜனநாயகப் பெற்றோராக இருக்க முயற்சி செய்யுங்கள்.

• சிறிய உடற்பயிற்சிகளைக் குடும்ப மட்டத்தில் அனைவரும் இணைந்து செய்யலாம். பாரம்பரிய விளையாட்டுக்களை அறிமுகம் செய்வதோடு (ஆடு புலியாட்டம், கிட்டிப்புள், கிளித்தட்டு) மற்றும் தங்களுக்கு தெரிந்த கரம், சதுரங்கம் போன்ற உள்ளக விளையாட்டுகளிலும் அனைவரும் இணைந்து விளையாடலாம். அத்துடன்; சுவாசப் பயிற்சி, சிறிய தியானப் பயிற்சிகள், கூட்டுப்பிரார்த்தனை போன்றவற்றையும் செய்யலாம்.

• சமூக ஊடகங்கள் மற்றும் இணைய பாவனையை ஆரோக்கியமான முறையில் கொண்டுசெல்ல சிறுவர்களுக்கு வழிகாட்டுதல் வேண்டும்.

• சிறுவர்களை குடும்ப மட்டத்தில் திட்டமிடுதல், தீர்மானம் எடுத்தல் செயல்களில் உட்படுத்துதல். பொதுவாக உணவு தயாரித்தல், வீட்டைச் சுத்தம் செய்தல் அல்லது வீட்டில் புதிய செயற்பாடொன்றை உதாரணமாக வீட்டுத்தோட்டம் அமைத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுத்தலாம். குடும்பம் சார்ந்த முக்கிய தீர்மானம் மேற்கொள்வதிலும் அவர்களை உள்வாங்குதல் அவசியம். இவ்வாறான செயற்பாடுகள் சிறுவர்களுக்கான மதிப்பையும் அங்கீகாரத்தையும் பெற்றோர் தமக்கு வழங்குவதை சிறுவர்களுக்கு உணரச் செய்யும்.

• குடும்ப மட்டத்தில் குறிப்பிட்ட நபர்களுக்கிடையிலான உணர்வு நிலைகளை ஆரோக்கியமான விதத்தில் அவர்களோடு பகிர்ந்து கொள்ளுதல். குடும்ப உறவினரோடு முரண்பாடு காணப்படுமேயானால் அதை அவருடன் நேரடியாக உரையாடி சரிசெய்தல். இந்நிலையானது சரியான ஆரோக்கியமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கு மிகவும் உதவி செய்யும்.

• வீட்டில் அனைவரும் இருப்பதால் குறிப்பான சில உறவு நிலைகள் தொடர்புகள் (கணவன் மனைவி உறவு) சிறுவர்களின் உணர்வுகளைப் பாதிப்பதாக அமையும். எனவே பெற்றோர் அல்லது வளர்ந்தவர்கள் அவற்றை சிறுவர்கள் கண்டுகொள்ளும் அல்லது அவர்களுக்கு தூண்டுதல்களை உருவாக்குமளவிற்கு இட்டுச்செல்லாது இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

• முக்கியமாக வீட்டு வன்முறைகள் அல்லது சிறுவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நிலவுகின்ற சூழ்நிலையில் சிறுவர்கள் இருப்பார்களேயானால் அயலவர்களோ அல்லது வீட்டில் உள்ளவர்களோ உரிய அதிகாரிகளை அல்லது பொலிஸ் மற்றும் கிராம அலுவலகர் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் போன்றவர்களுக்கு முறைப்பாடுகளைச் செய்தல் கட்டாயமானதாகும். குறிப்பிட்ட சிறுவர் தொடர்பாக ஆபத்து நிலைமை இருக்கும் எனத் தெரிந்தும் நீங்கள் முறைப்பாடு செய்யாதிருப்பீர்களானால் நீங்களும் சிறுவர் துஸ்பிரயோகம் செய்த நபராகவே கருதப்படுவீர்கள்.

• சிறுவர்களை இந்த சூழ்நிலையில் கையாளுவதில் இடர்பாடுகள் இருக்குமாயின் உளவளத்துணையாளர்கள், உளமருத்துவர்கள், சிறுவர்கள் தொடர்பாக கடைமையாற்றும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுதல் நன்மை பயக்கும். சிறுவர்களின் குழப்பமான மனநிலை நீடிக்குமாயின் தாக்கங்களின் வீரியம் அதிகரிப்பதற்கான சந்தர்ப்பமும் அதிகமாகும்.

• இவ்விடயங்கள் தொடர்பாக சமூகப் பொறுப்பிலிருப்பவர்கள், விடயத் தெளிவுடையோர் ஏனைய பெற்றோருக்கு முடிந்தளவு தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ளுதல் அவசியம் ஆகும்.

ந.றஞ்சுதமலர்
உளவளத்துணையாளர்

(வீரகேசரியில் கடந்த மே மாதம் 10ம் திகதி பிரசுரமான கட்டுரை)